புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் மது போதையில் குழப்பம் விளைவிக்கும் சம்பவமும் அதிகரித்து காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
புங்குடுதீவில் இருந்து யாழ்.நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் அதே பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தை நெரித்தார் என குறித்த பெண்ணினால் ஊர்காவற் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அந்நபரின் மனைவி குழந்தை ஒன்றினை பிரசவித்து உள்ளதாகவும், அக் குழந்தையே முதல் குழந்தை எனவும் அதனால் தாயையும் பிள்ளையையும் பார்வையிட அந்நபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சட்டத்தரணி ஒருவர் பினை விண்ணப்பம் கோரி இருந்தார்.
அதற்கு ஊர்காவற்துறை பொலிசார் எதிர்ப்பு தெரிவித்ததுடன் , புங்குடுதீவு பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மதுபோதையில் குழப்பம் விளைவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலையே அவற்றை கட்டுப்படுத்த முடியும். என தெரிவித்தனர்.
பொலிசாரின் கூற்றை ஏற்றுக் கொண்ட நீதவான் குறித்த நபருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.
குளோபல் தமிழ்ச் செய்தி