மறுதலிப்புக்களால் உண்மையைக் குழிதோண்டிப்புதைத்துவிட முடியாது!
‘உலகத்தின் மிக ஆழமான இடத்தில் குழிதோண்டிப் புதைத்தாலும் உண்மை அதற்குரிய கம்பீரத்துடன் ஒரு நாள் சிம்மாசனம் ஏறுவதையாராலும் தடுத்துவிடமுடியாது’ என்ற வரிகளை என்னைப்போன்று உங்களில் பலரும் படித்திருக்க வாய்ப்புண்டு.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைப் படுகொலைசெய்வதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ முயற்சிப்பதாகவும் இதனை ஒருவேளை இந்திப்பிரதமர் மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’ எனவும் கூறியதாக இந்தியாவின் த ஹிந்து செய்திப்பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்றிய தம்மை இனங்காட்டிக்கொள்ளவிரும்பாத தரப்பினரை மேற்கோள் காட்டி இந்த செய்தியை ஹிந்து பத்திரிகையின் கொழும்பு நிருபர் மீரா ஸ்ரீனிவாசன் எழுதியிருந்தார்.
இந்தச் செய்தி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசலுக்கு வழிகோலியதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் எதிரொலியாக இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் நான்கு மறுப்பறிக்கைகள் வெளியிட நேர்ந்தமை விரிசலின் பரிணாமத்தைப் பறைசாற்றிநிற்கின்றது.
பிரதமரை இந்தியாவில் வரவேற்பதற்காக இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை ஒத்திவைத்துவிட்டு உடனேயே ஜனாதிபதியைச் அவசர அவசரமாக சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து விளக்கம் கோரியிருந்தார்.
இதன்போது தான் சொன்னகருத்தை திரிவுபடுத்தி தவறுதலாக பிரசுரித்துவிட்டதாக நிருபர் மீதும் ஊடகத்தின் மீது பழியைச் திருப்பிவிட்டிருந்தார் ஜனாதிபதி.
கடந்த புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அவருக்கு விளக்கம் அளிக்கவேண்டிய நிலைகூட ஜனாதிபதிக்கு நேர்ந்ததெனில் அந்த செய்தி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதெனப் புலனாகும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறுவதைப் போன்று இந்தியப் பத்திரிகையாளர் வெளியிட்ட செய்தி உண்மைக்குப்புறம்பானது என இந்திப்பிரதமரும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது மிகவும் அதிருப்தியும் கவலையும் தோய்ந்த கருத்துக்களை பிரதமர் மோடி வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.
இலங்கை அரசாங்கத்தின் மறுப்பறிக்கைகளுக்கு மத்தியிலும் ஹிந்துப்பத்திரிகையின் முகாமைத்துவம் தன்னுடைய நிருபரின் செய்தியின் பின்னால் உறுதியாக நின்றது.
உண்மையின் மீது அவர்கள் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையை துலாம்பரமாக காண்பித்துநின்றது.
கடந்த வாரத்தில் இலங்கை -இந்திய உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் அளவிற்கு சென்ற செய்தியின் பின்னாலுள்ள உண்மை தற்போது உறுதியாகிவிட்டது. இதற்கு இவ்வாரம் வெளிவந்துள்ள இலங்கையின் முக்கிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்களும் அரசியல் பத்திகளும்சான்று பகர்கின்றன.
இன்றைய தினம் வெளியாகியுள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ‘ ஒரு செய்தியை அரசாங்கம் நிராகரிக்கின்றபோதுதான் அது உறுதிப்படுத்தப்படுகின்றது என பத்திரிகை உலகில் ஒரு துணுக்குக்கதை உள்ளது’என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேசத்திற்கு முன்பாக ஒன்றைப் பேசுவதும் பின்னர் உள்நாட்டில் வேறொன்றைப் பேசுவதும் இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதியதல்ல.
பொறுப்புக்கூறல் விடயத்தில் 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையில் வழங்கிய வாக்குறுதிகள் இன்று காற்றில்பறக்கவிடப்பட்டுவிட்டன அன்றேல் மறந்தொதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை மறுதலித்து அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமல் அன்றேல் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவை அரசாங்கம் மெல்லமேல்ல எதிர்கொள்ளவேண்டிய கசப்பான காலம் ஏற்பட்டிருக்கின்றது.
பிரேசில்நாட்டுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவராக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீதான போர்க்குற்றச்சாட்டு வழக்குத்தாக்கலையடுத்து அந்த நாட்டில் இருந்து பதவிக்காலம் நிறைவடைய முதலாக வெளியேற நேர்ந்தமை நினைவிருக்கும்.
தற்போது ஐநா அமைதிகாக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவ அதிகாரியான லெப்டினன் கேர்ணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அழைக்குமாறு ஐநா கோரியுள்ளது.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களின் எதிரொலியாவே இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐநாவினால் எடுக்கப்படும் முதலாவது நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது.
வெளியே ஒன்றைச் சொல்வதும் உள்ளே வேறொன்றைச் சொல்வதுமாக இருப்பினும் உள்ளே ஒன்றைச் சொல்லிவிட்டு வெளியே வேறொன்றைச் சொல்வதாக இருப்பினும் அரசியல்வாதிகள் ஒருவிடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அதுதான் உண்மையை எப்போதுமே குழிதோண்டிப்புதைத்துவிட முடியாது .அது தனக்கே உரித்தான கம்பீரத்துடன் சிம்மாசனம் ஏறும். இதற்கு மீரா ஸ்ரீனிவாசனின் செய்தி சிறந்த உதாரணமாகும்.
இந்து சமுத்திரத்தில் கேந்திர ஸ்தானத்தில் இருக்கின்றோம் என்ற மமதையில் அதை வைத்துக்கொண்டு வல்லரசு நாடுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் போட்டியில் பேரம்பேசி காய்களை நகர்த்தி தமது நலன்களை அடைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு உண்மைகளைப் புறந்தள்ளிச்செயற்பட முற்பட்டால் இலங்கை சர்வதேசத்தில் அவமானத்திற்குள் தள்ளப்படுவது மட்டுமன்றி வல்லரசு நாடுகளின் பகைமைக்கும் ஆளாகலாம் என்பதை இந்த விடயம் துலாம்பரமாக்கிநிற்கின்றது.