யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்!
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாள் வெட்டுக்குழுக்களை இலக்கு வைத்து பொலிஸார் வீதி சோதனை, விசேட சுற்றிவளைப்புக்கள், சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை ஆகியவற்றை முன்னெடுத்து வருகின்ற போதிலும் வாள் வெட்டுக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாதமையினால் பொதுமக்களிடத்தில் தொடர்ச்சியாக அச்சம் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.