வவுனியா அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாகவுள்ள அபாய நிலை!
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாகவுள்ள பகுதியில் மழைக்காலங்களில் அபாய நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பகுதியானது குன்றும் குழியுமாக உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் காணப்படும் ஒரே ஒரு உணவகமாக அம்மாச்சி உணவகம் காணப்படுகின்றது.
தூர இடங்களிலிருந்து பேருந்துகளில் வரும் பெருமளவானோர் இந்த உணவகத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்னாலுள்ள பகுதியானது குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சிலர் குழி எது பாதை எது என தெரியாமல் விழுந்து படுகாயங்களுக்கு உள்ளாகும் அபாய நிலையும் காணப்படுகிறது.
எனவே இந்த பகுதியை செப்பனிட்டுத்தர வேண்டுமென அம்மாச்சி உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.