ஆவா குழு தொடர்பாக ஆளுநரின் கருத்தில் சந்தேகம்!
ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் ஒழிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை (புதன்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவா குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால், ஏன் அதனை அரசாங்கம் ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை?
இதனால் ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மறுத்து வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அரசாங்கமும் ஆளுநரும் அசட்டையீனமாக இருந்து வருகிறனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் இப்படி இருக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசு என்று சர்வதேச சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்து வருவதுடன், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்றும் ஏமாற்றி வருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.