சீனா கடல்சார் துணைக் கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது!
சீனாவின் புதிய முயற்சியாக கடல்சார் விடயங்களை கண்காணிப்பதற்காக புதிய செயற்கை கோள் ஒன்றை விண்வௌியில் நிலைநிறுத்தியுள்ளது.
தொலைத்தூர பயணத்திற்கு பயன்படுத்தப்படும் 4B உந்துகணையின் உதவியுடன், HY-2B செய்மதி இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் வடக்கு சினாவில் அமைந்துள்ள தையூன் செய்மதி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செய்மதி தொலைக் கட்டுப்பாட்டு இயக்க தொழினுட்பத்தைக் கொண்டுள்ளது. சமகாலத்தில் கடற்பரப்புகளில் நிகழும் சம்பவங்களை இந்த செய்மதி காணொளியாக சேகரிக்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட HY-2A செய்மதியுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயற்கைக்கோள், சுற்றுச்சூழல் கண்காணிப்பின் பொருட்டு தொடர்ந்து HY-2C மற்றும் HY-2D செய்மதிகளுடன் பிணையத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
HY-2 செயற்கை கோள் திட்டத்தின் ஆலோசகர் மா ஷிஜூன் இது பற்றி கூறுகையில் “மூன்று செயற்கைக்கோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் இயங்குகின்றன, ஆனால் வெவ்வேறு துறைகள் சார்ந்த கண்காணிப்புகளை அவை மேற்கொள்கின்றன.
இதன்படி, நாம் ஒவ்வொரு தருணத்திலும் கடல்சார் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், 24 மணித்தியாலங்களும் ஒரு பிராந்தியத்தின் துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் அதன் இயக்கவியல் கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
HY-2B செய்மதியின் ஊடாக கடல் மட்டம், காற்று மற்றும் வெப்பநிலையின் அளவு போன்ற கடலின் இயக்கவியல் காரணிகளை துல்லியமாக கண்காணிப்பதன் மூலம், கடல்சார் சமூகத்தினருக்கு கூடுதல் துல்லியமான பயணத் தகவலை வழங்க முடியும்.
அத்துடன் உலகளாவிய கப்பல்களை தானாக அடையாளம் காணவும், பொருத்தமான தகவலை சேகரிக்கவும் இந்த செயற்கைகோள் திறன்படைந்துள்ளமை கூடுதல் விசேடம்சமாகும்.