கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்!
வரலாறு அறிந்த டைட்டானிக் கப்பலைத்தான் அனைவரும் மனதில் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பழங்காலத்தில் இடம்பெற்ற பல போர் சூழ்நிலை மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக இவ்வாறு பெறுமதி வாய்ந்த பல கப்பல்கள் மூழ்கி கடலுக்கடியில் மறைந்திருக்கின்றன.
அந்தவகையில், பல்கேரியா நாட்டின் கடல் எல்லைக்குள் கருங்கடல் பகுதியில் சுமார் 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிரேக்க நாட்டை சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மற்றும் பல்கேரிய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது.
இது பல்கேரியாவின் வடக்கு கருங்கடலோரப் பகுதியிலிருந்து கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதைவடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக கருங்கடலில் இதனை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்தில் ஒக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இந்த கப்பல் இருந்ததால், சிதைவடையாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுவரை கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கப்பல்களின் பாகங்கள், சிதைவடையாமல் இருந்தவற்றில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் கிறிஸ்துவுக்கு முன் 400 வது ஆண்டைச் சேர்ந்தது என ரேடியோகார்பன் பரிசோதனையின் மூலம் அறியப்பட்டுள்ளது.
ஆழ்கடல் தன்னியக்க ஔிப்படக் கருவிகள் மூலமாக அந்த கப்பலின் ஔிப்படங்கள் மற்றும் காணொளி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கப்பல் தொடர்பாக கடந்த வருடமே அறியப்பட்ட போதும், அதன் மீதான ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில் தற்போது இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ள என்று தொல்பொருள் ஆய்வாளர் ட்ராகோமீர் கார்போவ் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கிரேக்க வர்த்தக கப்பல் என்று கருதப்படுவதுடன், தமது ஆராய்ச்சியின் ஊடாக ஒரு கப்பல் வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்வதாக அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்குழு, சவுத்தெம்டன் பல்கலைக்கழகம் மற்றும் பல்கேரிய விஞ்ஞான கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் சார்பில் தேசிய தொல்பொருள் நிறுவனம் என்பனவற்றின் தலைமையில் செயற்படுத்தப்படுகிறது.
லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இந்த ஆய்வுகள் தொடர்பான ஒரு தொகுப்பு ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.