ராஜபக்சவினர் இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு இழப்பீட்டை வழங்கினார்கள்?
கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி ஆகியோரின் தோள்களில் கைகளை போட்டுக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, விமல் வீரவங்ச போன்றவர்கள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்ப்பது கேலிக்குரியது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணாவுக்கு, பால் கொடுத்து சுக போகங்களை வழங்கிய கூட்டு எதிர்க்கட்சி கோஷ்டி ஐக்கிய தேசியக்கட்சியின் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது ஆச்சரியத்தை ஏற்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயலகம் தொடர்பான சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க போன்றவர்களை கொலை செய்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
சட்டமூலத்தில் இருக்கும் நல்ல விடயங்கள் பற்றி பேசாது நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்க போவதாக கூறி கோஷம் ஒன்றை உருவாக்கி மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியுமா என்று முயற்சித்து வருகின்றனர்.
தலதா மாளிக்கை மீது குண்டு தாக்குதல் நடத்திய, அரந்தலாவையில் பிக்குகளை கொலை செய்த மற்றும் காத்தான்குடியில் முஸ்லிம்களை கொலை செய்தவர்களுக்கு நாங்கள் இழப்பீடு வழங்க போவதாக விமல் வீரவங்ச கூறுகிறார்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் கருணாவே தலைமை தாங்கினார்.
அந்த கருணாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து அமைச்சரவையில் உட்கார வைத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக நியமித்தனர். பிள்ளையானை முதலமைச்சராக்கினார்கள். கே.பிக்கு சுகபோகங்களை வழங்கினர்.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இவர்கள் இப்படித்தான் விடுதலைப் புலிகளுக்கு இழப்பீட்டை வழங்கினார்கள். அன்று அப்படி செய்தவர்கள் தற்போது எம்மீது குற்றம் சுமத்துகின்றனர் என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.