ஆட்சியில் பங்கெடுத்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்காக உழைப்போம்!

ஆட்சியில் பங்கெடுத்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்காக உழைப்போம்!

நாம் மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடமேற்றியதாக கூறிய கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

பல தசாப்தங்களுக்கு மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு,வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும்,எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் எமது கட்சி வழங்கும்.

இதேவேளை பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள மாகாணசபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம் என்றார்.

Copyright © 5547 Mukadu · All rights reserved · designed by Speed IT net