ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமைவாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை!
ஜனாதிபதியின் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை)மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வட. மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதன்போது முள்ளிக்குளம் பிரதேசத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 100 ஏக்கர் காணயில் 23 ஏக்கர் காணியினை விடுவிக்கப்படவுள்ளது.
எனினும் கடற்கடையினர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமையினால் ஒரு சில மாதங்களில் குறித்த 23 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளனர்.
இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை கடற்படை முகாம், பேசாலையில் மீன் பிடி திணைக்களத்திற்கு சொந்தமான இராணுவம் தற்போதுள்ள காணிகளும் விடுவிப்படவுள்ளன.
மேலும் காணி விடுவிப்பு தொடர்பில் மேலும் ஒரு கூட்டத்திற்கு வரும் போது விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் தரவுகளை கடற்படையினர், இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் உரிய முறையில் வழங்கவேண்டும்.
மேலும் வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் தொடர்பாகவும் மாவட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.