பொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்!
பொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திடமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக காலமாறு நீதிப்பொறிமுறைமை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அண்மைக் கால நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் மைல் கல்லான சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு மதிப்பளித்து வன்முறைகளில் ஈடுபடுவதனை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டுமெனவும் டேவிட் மெக்கினோன் குறிப்பிட்டுள்ளார்.