இலங்கை அதிகார வெற்றிடத்தில் சிக்கியுள்ளது!
இலங்கை அதிகார வெற்றிடத்தில் சிக்குண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், தற்போதைய முறுகல் நிலைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்திற்கு இடமளிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”தற்போதைய நிலையில் நாட்டில் வெற்றிடமொன்று உள்ளது. நாட்டிற்கு பொறுப்பாக யாருமே இப்போது இல்லை. இதன் காரணமாகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையை கொண்டிருக்கினறார்கள் என்பதை தீர்மானிப்பதற்காக அதனை உடனடியாக கூட்டுமாறு கோருகின்றோம்.
நான் இன்னமும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் பிரதமராக உள்ளேன்.
19ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவரால் பிரதமரை பதவிநீக்க முடியாது. சபாநாயகரால் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியும்” என்றார்.
தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலகிய நிலையில், நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
எனினும், பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே குறித்த நியமனம் செல்லுபடியாகுமென ஐ.தே.க.வினர் தெரிவித்துள்ளதோடு, விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.