இலங்கை உள்விவகாரத்தில் சீனா தலையிடாது!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிடப் போவதில்லையென சீனா உறுதியளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களுக்கு பணியாற்றும் இலங்கை செய்தியாளர்களை ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் சந்தித்தார்.
இதன்போது, ஐ.தே.க. உறுப்பினர்களை மஹிந்த தரப்பினர் விலைக்கு வாங்குவதற்காக சீனா பாரிய நிதியை செலவிடுவதாக ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வருவதாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்துக்கூற ரணில் மறுத்துவிட்டார்.
எனினும், இலங்கை உள்விவகாரங்களில் சீனா தலையிடாதென சீனத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சீனாவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார்.
அவரது ஆட்சிக்காலத்திலேயே இலங்கையில் சீனா பாரிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுத்தது.
மஹிந்த பதவியில் இல்லாதபோதுகூட, இலங்கை வரும்போதெல்லாம் சீன பிரதிநிதிகள் மஹிந்தவை சந்திக்கத் தவறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.