ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாடு காரணமாக இலங்கையின் அரசியல் இன்று சர்வதேசத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தனது அரசியல் நிலையினை தக்க வைத்துக் கொள்ளவே நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தமை எதேர்ச்சையாக இடம்பெறவில்லை. அதுவொரு அரசியல் சூழ்ச்சி.
கடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் நாட்டு மக்கள் உட்பட சர்வதேசங்களும் கேள்வி எழுப்பினர்.
அனைவரின் கேள்விகளுக்கும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கும் வகையில் உரையாற்றினார்.
இவரது உரையில் எவ்வித புதிய விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது“ என தெரிவித்துள்ளார்.