நாட்டின் அரசியல் நிலைமை குறித்து ஐ.நா. கவலை!
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள அரசியலமைப்பு நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் வகையில் அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இருவருக்கும், சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் நிலைமை பற்றி ஐ.நா. தூதுவர் கவலை வெளியிட்டதுடன், இந்நெருக்கடிகளை உடனடியாக தீர்க்க வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்ததாக குறித்த சபாநாயகர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.