பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்:இசுறு தேவப்பிரிய
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே.
இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையினை உறுதிப்படுத்தி ரணிலை மீண்டும் பிரதமராக்குவோம் என்று குறிப்பிட்டவர்கள் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமருவதாக குறிப்பிடுகின்றமையின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேல்மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
பாராளுமன்றத்தினை கூட்டுங்கள் எங்களின் பலத்தினை உறுதிப்படுத்துவோம் என்று குறிப்பிட்டவர்கள் தற்போது எதிர்க் கட்சி பதவியில் அமர தயார் என்று குறிப்பிடுவது அவர்களது இயலாமையினை வெளிப்படுத்துகின்றது.
2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பதவி பொது எதிரணியினருக்கே கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் அவையும் சில காரணங்களினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது
ஆனால் தற்போது தங்களின் பெரும்பான்மை ஆதரவு குறைந்து வரும் பட்சத்தில் எதிர் கட்சி பதவியினை கோருகின்றனர்.
இப்பதவியினை ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்க முடியாது.
பாராளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் கிடைக்கப் பெறும் வரை இரா. சம்பந்தனே எதிர்கட்சி தலைவர் என்றார்.