ரணிலை கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முனைவுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமகால அரசியல் மட்டத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமரின் செயற்பாடு பாரிய சவாலுக்குள்ளானதாக மாறி வருகிறது.
இந்நிலையில் அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.
தனக்கு அவ்வாறான எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை. இது போலியான ஒரு குற்றச்சாட்டு எனவும், அடிப்படையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பற்ற நடவடிக்கையாக இந்த கருத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதியான ஒருவர் இவ்வாறான கருத்து வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.