2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்!

2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குளறுபடிகளை தடையாகக் கருதாது இந்த ஆண்டு நிறைவடையும் போது பூர்த்திசெய்யப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன் கீழ் நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நடும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சூழல் பாதுகாப்பிற்காக விரிவானதோர் பணியை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி;, இதற்கு மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை பிள்ளைகள் மற்றும் அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கண்டறிவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை அபிவிருத்தி, வனஜீவராசிகள், காணி, வீடமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அழிவுக்குள்ளான விவசாய நிலங்களுக்கான நட்ட ஈடு வழங்கும் முறைமை குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சிறுபோகத்தின் போது வறட்சியினால் அழிவுக்குள்ளான வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு விதை நெல்லை இலவசமாக வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோன்று வன விலங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளின் போது நட்ட ஈடு வழங்குவதிலுள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Copyright © 2373 Mukadu · All rights reserved · designed by Speed IT net