நான் ஜனாதிபதியாவதையே மக்கள் விரும்புகின்றனர்!
அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகமான மக்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இன்றையதினம் கொழும்பைத் தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் அரசியல் பத்தியில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நகர்வுகளை கடந்த பல மாதங்களாக முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளது.
‘வியாத்மக’ என்ற சிங்களப் பெயரிலான அமைப்பின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த போதும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அது கைவிடப்பட்டதாக அந்தப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வியாத்மக’ என்பதை ஆங்கிலத்தில் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு ‘என்று குறிப்பிடுகின்றனர்.
கோட்டாபய ஏற்கனவே ‘எலிய’ என்ற அமைப்பின் மூலம் கடந்த பலமாதங்களாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.