எதிர்ப்புகளை கடந்து அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பாரிய பொருளாதார தடை!
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றது.
எண்ணெய்வளம் நிறைந்த நாடான ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பனிப்போரின் உச்சகட்டமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
இத்தடை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரமே அறிவித்திருந்த நிலையில், அதற்கெதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றை கடந்து இன்றுமுதல் குறித்த தடை அமுலுக்கு வரவுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் விரசல் ஏற்பட்டு வந்தது.
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தற்போது விலகியுள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் மீள நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இந்நடவடிக்கையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி செயற்பாடுகள், கப்பற்றுறை போன்ற முக்கிய துறைகளை பாதிப்பதால் ஈரானின் பொருளாதாரத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவின் இச்செயற்பாடு இருநாட்டு உறவுகளையும் பாதிக்குமென ஏற்கனவே ஈரான் குறிப்பிட்டு வந்தது.
எனினும், ஜனாதிபதி ட்ரம்ப் தனது கொள்கையில் உறுதியாக உள்ள நிலையில், அமெரிக்காவின் செயற்பாட்டை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஈரான் குறிப்பிட்டுள்ளது.