ஜனாதிபதிக்காக வேலைசெய்தமையை எண்ணி வெட்கப்படுகின்றோம்!
இந்த சிங்கள அரசு எங்களுக்கு எந்த அதிகாரத்தினை தரும் யாராவது தர முன்வருவார்களா? நாங்கள் வீடு வீடாக சென்று வாக்குfக்கேட்ட ஜனாதிபதி கூறுகின்றார் கூட்டாட்சி நான் இருக்கும் வரை நடக்காது.
வடக்கு கிழக்கு நான் இருக்கும் வரை இணைக்கப்படாது என்கின்ற தலைவருக்கு நாம் வேலைசெய்திருக்கின்றோம் என்கின்றபோது வெட்கப்படுகின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, என்னுடைய தாய் தகப்பனார் வடமராட்சியை சேர்ந்தவர்கள்.அவர்களுடைய இரத்தத்தில் வந்த நான் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் எங்களுடைய இனத்தை காட்டிக்கொடுத்த இனத்தை அழித்த இரத்தத்தில் வாழ்கின்ற மகிந்த ராஜபக்சவுடன் சேரவோ அந்த இரத்தத்தில் வந்த பணத்தை வாங்குவதற்கோ நான் அடிபணியமாட்டேன் எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் எங்களுடைய மக்களை ஒருமைப்படுத்தவேண்டும்.
ஒரு நிலைப்பாட்டில் எங்களுடைய மக்களை வழிநடத்தக்கூடிய பிரதிநிதிகளாக நீங்கள் அந்தந்த கிராமங்களில் வாழ வேண்டும். நீங்கள் கிராமங்களில் வாழ்கின்ற வாழ்க்கைதான் எங்களுடைய தமிழினத்திற்கு விடிவை கொண்டுவந்துவிடவேண்டும் என உழைக்கின்ற எங்களுடைய தமிழரசுக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
உங்களுடைய செயல்பாடுகள் கிராமங்களில் மக்களுக்கு உழைக்காத வகையில் இருக்குமானால் அது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி எங்களை விட்டு செல்கின்ற மக்களாக எங்களுடைய பிரதேசத்தில் இனப்பரம்பலை ஊக்குவிக்கின்றவர்களாக மாறிவிடுவோம். எனவே எமது செயற்பாடுகளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஆகவே இந்த மகாநாடு உண்மையில் எதிர்காலத்தில் வவுனியா மாவட்டம் ஒரு தனித்துவமான ஒரு கட்சியின் கீழ் செயற்படும் மாவட்டமாக மாற்றியமைக்க கூடிய வகையில் இன்றைய இளைஞர் மகளிர்கள் செயல்பட வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றைய அரசியல் சூழல் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ஒரு விடயத்தினை மாத்திரம் எங்களுக்கு காட்டி நிற்கின்றது. அதில் எங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களின் கருத்து கூட இருக்கின்றது.
ஆயுதப்போராட்டம் இல்லாமல் ஜனநாயக வழியில் போராடி சிங்கள அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற ஒரு கருத்து இருந்தது.
ஒரு சிலர் மீண்டும் சொல்கின்றனர்.
இன்று நான் கேட்கின்றேன். இந்த சிங்கள அரசு எங்களுக்கு எந்த அதிகாரத்தினை தரும் யாராவது தர முன்வருவார்களா? நாங்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்ட ஜனாதிபதி கூறுகின்றார் கூட்டாட்சி நான் இருக்கும் வரை நடக்காது. வடக்கு கிழக்கு நான் இருக்கும் வரை இணைக்கப்படாது என்கின்ற தலைவருக்கு நாம் வேலைசெய்திருக்கின்றோம் என்கின்றபோது வெட்கப்படுகின்றோம்.
இத்துடன் கபளீகரமான ஆட்சியை பிடிக்கவேண்டும் என்கின்ற முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரியாக எப்படி 2018 இற்கு முன் ஆட்சி செய்தாரோ அதே தொனியில் அதே பாணியில் தற்போது ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றார்.
அவர் அச்சுறுத்தலால் அமைக்கும் ஆட்சி மக்களுக்கு ஜனநாயகத்தினை கொடுக்குமா என்கின்ற கேள்வி மக்களுக்கு உள்ளது. நான் மைத்திரிக்கு வாக்களித்தபோது மகிந்த வரக்கூடாது என்றே வாக்களித்தேன்.
அப்படிப்பட்ட மகிந்த ராஜபக்சவினுடைய கட்சிக்கு விலைபோனதாக ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில இணையத்தள ஊடகங்கள் தங்களுடைய பெயரைக்குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் கூறுகின்றார்கள்.
அவர்களுடைய நோக்கம் என்னையும் மக்களையும் அன்னியப்படுத்துவது. நான் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தெரிவித்திருந்தேன் நான் வீடு கட்டித்தருவேன், வீதி போட்டுத்தருவேன் என எண்ணுபவர்கள் எவரும் எனக்கு வாக்குப்போடவேண்டாம் என, நான் உண்மையாக இருப்பேன்.
வெளிப்படையாக இருப்பேன். தைரியமாக இருப்பேன்என்று கூறியே வாக்கு கேட்டு வந்திருந்தேன்.
அதில் எந்த மாற்றமும் எனது உயிர் இருக்கும் வரை வராது. என்னுடைய தாய் தகப்பனார் வடமராட்சியை சேர்ந்தவர்கள்.
அவர்களுடைய இரத்தத்தில் வந்த நான் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் எங்களுடைய இனத்தை காட்டிக்கொடுத்த இனத்தை அழித்த இரத்தத்தில் வாழ்கின்ற மகிந்த ராஜபக்சவுடன் சேரவோ இந்த இரத்தத்தில் வந்த பணத்தை வாங்குவதற்கோ நான் அடிபணியமாட்டேன் என மேலும் தெரிவித்தார்.