பிரபாகரன் பயங்கரவாதியா? முரளிதரன் கூறும் காரணங்கள்!
ஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ஆனால் வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன.
பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, இவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உலகில் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுள் ஒருவராக பார்க்கப்படும், இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என கருதப்படும் முத்தையா முரளிதரன் தற்போது இலங்கை அரசியல் குறித்து பேசும்போது, மக்களின் வாழ்க்கைநிலை, மக்களின் உரிமைகள், வடக்கு மக்களின் தேவைகள் குறித்து பேசும்போது, இதுவரையில் அந்த மக்களுக்கு ஏதுவான விடயங்கள் ஏதும் செய்தாரா என்ற கேள்வி எழுகின்றது.
அத்துடன், அவர் சார்ந்த மலையகத்தினருக்கு இதுவரையில் ஏதேனும் சேவைகள் செய்தாரா அல்லது அது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டாரா என கேள்விகள் எழுகின்றன.