கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.
சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
அதாவது ஜூன் 2014-ல் ஐஎஸ்ஐஎஸ். அறிவிப்பு தினம் முதல் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேண்டாதவர்களை, இயக்கத்தை எதிர்ப்பவர்களை, அயல்நாட்டினரை என்று பல்வேறு தரப்பினரையும், சுட்டுக் கொல்லுதல், தலையை துண்டித்தல், கல்லெறிந்து கொல்லுதல் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூக்கி வீசுதல் என்று பல்வேறு கொடூரமான விதங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஐ.எஸ்.
ஓர்பாலினச் சேர்க்கையாளர்கள், மத நிந்தனையாளர்கள், மதுபானக் கடத்தல் இன்ன பிற ‘குற்றங்களை’ செய்ததாக பலரும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஐ.எஸ். அமைப்பு துல்லியமாகக் கூற வேண்டுமெனில் 4,144 பேரை கொன்று குவித்துள்ளது. இதில் 2,230 பேர் சாமானிய மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறது சிரியா மனித உரிமை அமைப்பு. குறிப்பாக குர்திஷ் முஸ்லிம் மக்களை குறிவைத்து கொன்று குவித்து வருகிறது.
பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தனது உறுப்பினர்களையே கொல்வது என்பது ஐஎஸ்-இன் வாடிக்கை என்கிறது தி இண்டிபெண்டெண்ட்.
ஐஎஸ் அமைப்பில் இணைந்து கடந்த ஜூலை மாதம் வெளியேறிய முன்னாள் லண்டன் மாணவர் ஹாரி சர்ஃபோ தற்போது ஜெர்மனியில் சிறையில் உள்ளார், இவர் கூறும்போது, “கல்லால் அடித்துக் கொல்லுதல், சுட்டுக் கொல்லுதல், கைகால்களை வெட்டி எறிதல் உட்பட இன்னும் நிறைய பயங்கரங்கள் அந்தக் குழுவின் வன்முறைகளில் இருக்கிறது, இதனை நான் நேரில் பார்த்து பீதியடைந்திருக்கிறேன். 13 வயது சிறுவர்கள் வெடிகுண்டுகளை பெல்ட்டில் கட்டிக் கொண்டுபயங்கரவாதிகளாக மாற்றப்பட்டுள்ளதையும் கண்டுள்ளேன்.
என்னுடைய மோசமான நினைவு என்னவெனில் 6 பேரை இந்த 13 வயது சிறுவர்கள் சுட்டுக் கொன்றது. இதில் இன்னொரு மறக்க முடியாத கொடூரம் என்னவெனில் கையை வெட்டி அதை இன்னொரு கையில் பிடித்திருக்குமாறு வைத்து விட்டு வருவார்கள். இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாம் அல்ல என்பது மட்டுமல்ல மனிதக்கூறுகள் அற்றதும் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
துரோகி என்று குற்றம்சாட்டி சகோதரரே தன் சகோதரரை கொலை செய்யவும் வைப்பார்கள். நண்பர்களை வைத்தே நண்பர்களை கொலை செய்ய வைப்பார்கள்” என்றார் அவர்.
தமிழ் ஹிந்து