ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு மூன்றாக பிளவுப்படும்!
ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக பிளவுப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் பாதைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் 113 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வது நிச்சயம் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதிக்கு இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க முடியும். எனினும் தற்போது 11 நாட்கள் மாத்திரமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகள் எதற்காக தடுமாறுகின்றனர் என்பது தெரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளின் செல்ல பிள்ளை அல்லவா? ஆதனால் அதனை பொருட்படுத்த தேவையில்லை. வண்ணாத்திபூச்சி கதையை போன்றதுதான் அந்த கதையும்.
எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படவேண்டாம் என நாம் சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றோம்.
ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக பிளவுப்படும் என்பது உறுதி, ஜே.வி.வி எந்த வகையிலும் ரணிலை ஆதரிக்காது.
முஸ்லிம் காங்கிரசும், ரசாட்டின் கட்சியும் எம்முடன் இணைவார்கள். அப்படி பார்த்தால் 113 வாக்குகளுக்கு அதிகமாக பெற்று பெரும்பான்மையை நிரூபிப்போம்.” என அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.