தேர்தல் நடத்துவதை அமெரிக்கா ஏன் எதிர்க்கிறது?
நாட்டில் தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
பிரதமர் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”கடந்த 15 நாட்களாகவே ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக விரோத செயற்பாட்டில் ஈடுபடுகின்றது.
நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் தீர்வுகாண வேண்டுமென ஐ.தே.க., ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் நாம் அதற்கு ஒருபடி மேலே சென்று மக்களிடமே அதனை விட்டுவிட்டோம். இனி மக்கள் தீர்மானிப்பார்கள்.
மேலும், சர்வதேசத்தில் இயங்கும் புலிகளின் பணம் ஐ.தே.க.விடம் தற்போதும் இருக்கிறது. அதனை பற்றி அஞ்சாத ஐ.தே.க. இன்று தேர்தலுக்கு அஞ்சுகின்றனர்.
அதற்காகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறுகின்றனர். தைரியம் இருந்தால் தேர்தலை எதிர்கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு ஜனநாயக செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை ஏன் என எமக்குத் தெரியவில்லை.
புதிய பிரதமரரை ஜனாதிபதி நியமித்தமை சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால் அதனை சபாநாயகர் எதிர்க்கின்றார்.
இதனால் நாம் இரு உயிர்களையும் இழந்துவிட்டோம். உலக நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்தன. சபாநாயகர் பக்கச்சார்பின்றி செயற்பட்டிருந்தால் நாட்டில் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது” என்றார்.