எதிர்க்கால சந்ததியினருக்கும் துரோமிழைக்கப்பட்டுள்ளது!
அரசமைப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்வதானது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, எதிர்க்கால சந்ததியினருக்கும் இழைக்கும் துரோகமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று(சனிக்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘நாம் தேர்தலுக்கு என்றும் அஞ்சியதில்லை. ஆனால், இந்த நாட்டில் அரசமைப்பு என்ற ஒன்று இருக்கிறது.
19 ஆவது திருத்தச்சட்டத்தில், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதைமீறி கலைக்க வேண்டுமெனில், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசமைப்புக்கு முரணான அந்தத் தரப்பினர் செயற்படுவார்களாயில், அது பாரதூரமான குற்றமாகும். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு முரணானதாகும்.
நாம் 126 உறுப்பினர்களுக்கும் மேல் நாடாளுமன்றில் காண்பிக்க தயாராகவே இருந்தோம். எனவே, எமக்கு தேர்தலுக்கு முகம்கொடுப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
தேர்தலின்போது அவர்களுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் வெற்றிப்பெறவில்லை எனில், மீண்டும் இரண்டு வாரங்களில் அவர்கள் நாடாளுமன்றைக் கலைக்கக்கூடும். இதனையா மக்கள் எதிர்ப்பார்த்துள்ளார்கள்?
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்ததும் அரசமைப்பை பாதுகாக்கவே. எனவே, அனைத்து தரப்பினருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.