பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை!
பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அபரீதமாக வளர்ச்சியடைந்தது.
அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே மைத்திரி – ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு மேற்குலக நாடுகளும் இந்தியாவும் பாரிய பங்களிப்பை வளங்கியிருந்தன.
இருந்தாலும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபட முடியவில்லை.
இந்நிலையில் இலங்கையில் தங்களுடைய பிடியை இறுக்குவதற்கு மேற்குலகம் – இந்திய கூட்டணி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தது.
குறிப்பாக, உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டில் மஹிந்த தரப்பின் கைமேலோங்குவதை உணர்ந்து கொண்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவும் நிலைமை முழுமையாக மாறுவதற்கு முன்னர் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்தனர்.
குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி, மத்தள விமான நிலையம், திருகோணமலை எண்ணெய் குதங்கள், பலாலி விமான நிலையம் போன்றவற்றின் அதிகாரங்களை தம்வசம் எடுத்துக்கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளது.
அதனை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டே தற்போதை அரிசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.