தேர்தல் நடத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பிரதமர் மஹிந்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெறும் உத்தியோகபூர்வ நிகழ்வு விஜேராம மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, பிரதமர் மஹிந்த தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்-
”நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதே எமது பிரதான திட்டமாக இருந்தது. அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு மக்கள் தீர்ப்புக்கு செல்லவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.
நாம் எடுத்திருக்கும் இந்த தீர்மானம் சரியா, தவறா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது.
மக்களுக்குள்ள இந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால்கூட சவாலுக்குட்படுத்த முடியாது.
அவ்வாறு செய்யப்படுமாயின், அது எமது நாட்டு இறைமைக்கு எதிரானது. அத்தோடு, அது மக்களுக்கு எதிரான செயற்பாடாகவும் அமையும்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தேர்தலாகும். தேர்தல் என்றால் ஏன் அச்சப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
எங்களுக்கு தேர்தல் குறித்த அச்சம் கிடையாது. தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம். தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
19ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் தேர்தலுக்குச் செல்வதற்கும் அதிகாரம் இருக்கிறது. எது ஜனநாயகம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
நாங்களும் இப்போது எங்களது சட்டத்தரணிகளை சந்திக்கவுள்ளோம். அறிவித்தபடி ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும். அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எவராலும் தடுக்க முடியாது.
மக்களிடம் சென்று மக்களின் ஆணையை கேட்பதையே சர்வதேச நாடுகள் ஜனநாயகம் என ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே எமது முடிவை ஜனநாயகத்திற்கு விரோதமானதென கூற முடியுமா?
ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவர்களும் சர்வதேச நாடுகளின் இராஜாதந்திரிகளை சந்தித்து எமது தீர்மானம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.
அவர்கள் கண்டிப்பாக எமது தீர்மானம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். நானும் அவர்களை விரைவில் சந்தித்து எமது தீர்மானம் குறித்து விளக்கமளிக்கவுள்ளேன்” என்றார்.