வறுமையால் கருக்கலைப்பை ஊக்கப்படுத்தும் கனடா!
கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உள்ளடங்களான குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை ஏனைய நாடுகள் பின்பற்றுவதற்கு கனடா பிரசாரம் செய்து வருகின்றது.
வறுமைக்கு எதிரான போராட்டமாக இது அமைந்துள்ளதென கனடாவின் தேசிய அபிவிருத்தி அமைச்சர் மேரி க்ளோட், குடும்ப கட்டுப்பாடு தொடர்பான மாநாடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இவ்விடயங்கள் சர்ச்சைக்குரியதாக காணப்பட்டாலும்கூட கனடா தொடர்ந்தும் இந்நடவடிக்கையில் ஈடுபடுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் கல்வி என்பவற்றை வெளிப்படையாக கதைப்பதற்கு இன்று உலக நாடுகள் தயங்கி வருவதாக மேரி க்ளோட் சுட்டிக்காட்டினார்.
எனினும், தமது குழந்தை பிறப்பு, அதற்கான இடைவெளி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியமென குறிப்பிட்ட அவர், குறிப்பாக பெண்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டுவது அவசியமெனக் சுட்டிக்காட்டினார்.
கனடா இவ்விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளதென்றும், ஏனைய நாடுகளும் இவ்விடயத்தை முக்கியத்துவப்படுத்தி செயற்படுதல் அவசியம் என்றும் அமைச்சர் மேரி க்ளோட் மேலும் தெரிவித்தார்.