மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் 105 ஆவது தடவை அகழ்வு பணியானது நேற்றைய தினம் இடம் பெரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் அகழ்வு பணியானது இடம் பெறவில்லை.
அத்துடன் எதிர்வரும் இரு வார காலங்களுக்கு குறித்த அகழ்வு பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தொடர்சியாக மாவட்ட நீதிவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது.
இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது 232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தது.
இந்த நிலையில் முன் அறிவிதல் இன்றி நேற்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் இரு வாராங்களுக்கு திடீர் என அகழ்வு பணியானது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள் இடை நிறுத்தம் தொடர்பான எந்த வித அறிவுருத்தல்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.