சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கு அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பிரதமர் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலைமை தற்போது தோன்றியுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென பொதுஜன பெரமுன கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோன்று வெற்றிலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.