நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: தீர்மானம் மிக்க முடிவு இன்று!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் 10 மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதோடு, எஞ்சியவை இன்று பரிசீலிக்கப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற விசாரணையின் போது, நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு 19ஆவது அரசியலமைப்பிற்கு முரணானதென நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நான்கரை வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் 19ஆவது அரசியலமைப்பில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகளும் ஜனாதிபதியின் செயற்பாட்டை விமர்சித்து தமது வாதங்களை முன்வைத்தனர்.
இவற்றை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபரின் விளக்கத்தை கோரியுள்ளது. அதன் பிரகாரம் இன்று ஏனைய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, உயர்நீதிமன்றின் வியாக்கியானம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.