வாய்மூல வாக்கெடுப்பில் மஹிந்தர் வீழ்த்தப்பட்டார்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்,
“நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார்.
தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸ்ஸநாயக்காவினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில், ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 3 வர்த்தமாணி அறிவித்தல்கள் சட்டவலுவற்றவை என்பதையும் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும் தெரிவித்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தார்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாய்மூல வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.