இன்னிசை நிகழ்வின் மூலம் தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு!
பாடகர் மின்னல் செந்தில் குமரனின், இசை நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை, கனடாவின் டொரண்டோ நகரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
பாடகர் மின்னல் செந்தில் குமரன் கனடாவில் பல காலமாக தன்னுடைய பாடல் திறன் மூலமாகவும், நிகழ்ச்சி ஒருங்கமைக்கும் திறன் மூலமாகவும் பல லட்சம் டொலர்களை நிவாரண தேவைகளுக்காக சேர்த்து மிகுந்த பயனுள்ள திட்டங்களை ஈழத்தில் நிறைவேற்றி வருகின்றார்.
அந்த வகையில், சென்ற வெள்ளி அன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர், M.G.Ramachandran இன் 101ஆம் ஆண்டினை கொண்டாடும் விதமாக அவரின் சிறந்த பாடல்களை வடித்து தரும் விதமாக கனடாவில் குறித்த இசை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
டொரொண்டோ நகரத்திலே, கனடா நாட்டு இசை – பாடல் கலைஞர்களுடன் வெற்றிகரமாக நடந்தேறிய குறித்த நிகழ்வின் மூலம் ஐம்பதினாயிரம் டொலர்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, இதய நோயுடன் மரணத்தை எதிர் நோக்கியுள்ள நலிந்த குடும்பங்களில் உள்ள சிறார்கள் – இளம் வயதினருக்காக லங்கா மருத்துமனையில் இவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்காக பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடல் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும் அதே நேரம் ஏழு நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்சமயம் 4 சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதாக அறியப்படுகிறது.
சத்திர சிகிச்சைக்கான செலவு போக மிகுதி தொகை, கிளிநொச்சியில் கடந்த 2 ஆண்டுகள் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் முன்னாள் போராளிகள் – பொது மக்கள் அகியோருக்காக தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் நடமாடும் மருத்துவ சேவை என்று அவரின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது.
MGR ருடைய பாடல்களுக்கு ஏற்றபடி பல வண்ண உடைகளில் செந்தில் குமரனும் பிற பாடகர்களும் ஆடி பாடி இசை ரசிகர்களை மகிழ்வித்தனர்.
நிகழ்வுக்கு வந்திருந்தோரில் யாரும் $500 தர விரும்பினால் அவர்களை அங்கு கோவில் மணியினை அடிக்கும்படி செந்தில் குமரன் வேண்ட, மணி ஒலித்தபடியே இருந்தது.
ஒரு வித்தியாசமான வரவேற்கப்படவேண்டிய நிகழ்வு. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் நிகழ்ச்சியின் முழு செலவும் அவர் ஏற்று கொண்டு, சேர்ந்த முழு தொகையையும் நிவாரண செயற்பாடுகளுக்கு வழங்குவதாகும்.
இன்னிசை நிகழ்வின் மூலம் தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு!