நாடாளுமன்றில் அரங்கேறிய சம்பவம் முழு தேசத்தையும் தலைகுனிய வைத்துள்ளது!
நாடாளுமன்றத்தில் அரங்கேறிய இழிவான சம்பவமானது முழு நாட்டையும் தலைகுனிவிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவிய குழப்பநிலையை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே முன்னாள் பிரதமர் இவ்வாறு குறிப்பட்டார்.
கடந்த 85 வருடங்களில் இடம்பெற்றிராத வகையில் நேற்று அரங்கேறிய நாடாளுமன்ற குழப்ப நிலையானது நாடாளுமன்ற கட்டமைப்பையே சேதப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர், இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்குள் இதற்கு முன்னரும் சர்ச்சைகள் இடம்பெற்றிருந்த போதிலும், இவ்வாறான மிகக் கொடூரமான மிருகத்தனமான தாக்குதல்கள் ஒருபோதும் அரங்கேறியதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்ற சபாநாயகரை தாக்குவதற்கான ஆளுந்தரப்பினரின் முயற்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் என்பன வன்மையாக கண்டித்தக்கவை என்றும் குறிப்பிட்டார்.