29ஆம் திகதி வாக்கெடுப்பில் பலத்தைக் காட்டுங்கள்: ரணில்
எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள, பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை தோற்கடித்துக் காட்டுமாறு மஹிந்த அணிக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், பிரதமர் நியமனம் செல்லுபடியாகாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் புதிய பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளது.
இதுகுறித்து நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் யாவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசாங்கமோ அமைச்சரவையோ கிடையாதென ரணில் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனினும், நாடாளுமன்றில் குழப்பத்தை விளைவித்து உண்மையை மறைக்கும் செயற்பாட்டில் எதிர்த்தரப்பினர் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.
இதனை விடுத்து, முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி முன்வைக்கவுள்ள பிரேரணையை தோற்கடித்துக் காட்டுமாறு ரணில் சவால் விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும், நிதி தொடர்பான பிரேரணைகளை முன்வைக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென ஆளுந்தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.