தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!
தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் தினத்திற்குள் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நேற்று சீர்காழி அருகே கரையைக் கடந்து தற்போது தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா உட்பட தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
அது தற்போது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. நாளை முதல் 28 ஆம் திகதி வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும்.
29, 30 மற்றும் டிசம்பர் 1 திகதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது விட்டு விட்டு மழை பெய்யும்.
வரும் 29 ஆம் திகதிக்கு அடுத்தபடியாக டிசம்பர் 5 ஆம் திகதி ஒரு தாழ்வு நிலையும், டிசம்பர் 12 ஆம் திகதி ஒரு தாழ்வு நிலையும் உருவாக வாய்ப்புள்ளது.
அத்தோடு, டிசம்பர் 18, 20 ஆம் திகதிகளில் ஒரு தாழ்வு நிலையும், 25 ஆம் திகதி ஒரு தாழ்வு நிலையும் உருவாகுவதோடு, டிசம்பர் 29, 30, 31, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிகளில் ஒரு தாழ்வு நிலையும் உருவாகும்
அதேபோல் ஜனவரி 8 ஆம் திகதி ஒரு தாழ்வு நிலை என ஏழு அல்லது எட்டு தாழ்வு நிலைகள் உருவாகவுள்ளன.
அவற்றில் இரண்டு புயல்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஒன்று தென் தமிழகத்துக்கும், மற்றொன்று வட தமிழகத்துக்கும் வர வாய்ப்பு இருக்கிறது.
டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னர் பருவமழையின் இறுதி கட்டத்தில் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை தாமதம் அடைந்தாலும் பெய்யவேண்டிய மழை டிசம்பர் இறுதிக்குள் பெய்யும். மேலும் ஜனவரி தொடக்கம் முதல் 15 ஆம் திகதிக்குள் கன மழை பெய்யும்” என்று அவர் கூறினார்.