‘மெகா காட்டிக்கொடுப்பு’ நானும் புத்தகம் எழுதுவேன் – ராஜித பதிலடி!
‘மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ என்ற தலைப்பில் தாமும் புத்தகமொன்றை எழுதவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
” ரணிலுடனான அரசியல் உறவில் ஏற்பட்ட முறிவு குறித்து புத்தகமொன்றை எழுதவுள்ளதாக ஜனாதிபதி நேற்று அறிவித்தார். நானும் புத்தகமொன்றை எழுதவுள்ளேன்.
இலங்கை வரலாற்றில் மன்னர் காலத்தில் இடம்பெற்ற காட்டிக்கொடுப்புக்கு பின்னர் அரங்கேறிய மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு தொடர்பிலேயே அந்த புத்தகம் எழுதப்படும்.
பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாத மஹிந்த அணி, உடனடியோக வெளியேற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்படும். யானைப்படை வீதிக்கு இறங்கினால் என்ன நடக்கும் என்பதை மஹிந்த அணிக்கு சொல்லிக்கொடுப்போம்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கதையைக்கேட்டு மைத்திரி இன்று குழப்பிபோய் உள்ளார். நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். பெரும்பான்மையும் இல்லை. வேறு எதுவுமே இல்லை” என தெரிவித்துள்ளார்.