சபாநாயகர் மீது அசிட் தாக்குதல் நடத்த சதித்திட்டம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சதித்திட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற வேளையில், குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது சபாநாயகர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் தகவல் வெளியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்குள் அவர் நுழையும் போது மேலதிகமாக பொலிஸாரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அன்றையதினம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்க 5 நிமிடங்கள் முன்னதாக, 1.25 மணியளவில், தனது செயலகத்தில் இருந்து, சபா மண்டபத்துக்கு செல்லத் தயாராகிய போதே, சபாநாயகருக்கு இந்த தகவல் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, சபாநாயகரின் ஆசனத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கைப்பற்றியிருந்ததுடன், வாசலையும் மறித்துக் கொண்டு நின்றனர்.
அதையடுத்தே மாற்றுத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. பொலிஸாரின் பாதுகாப்புடன் பக்க வாசல் வழியாக சபாநாயகர் அழைத்து வரப்பட்டார்.
சபாநாயகர் தனது செயலகத்தில் இருந்து வெளியேறியதும், ஒருவர் அங்கு ஓடி வந்து, தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்.
சபாநாயகர் ஆசனப்பகுதியில் தடுத்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே அந்த தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குழப்பத்துக்கு தயாராகுமாறு விடுக்கப்பட்ட சமிக்ஞை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ஆதரவாகவும் சபாநாயகர் செயற்பட்டு வருவதாக ஆளும்தரப்பினரினால் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலை தொடருமாயின் அடுத்து வரும் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்கப் போவதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.