நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார்!
நம்பிக்கையில்லாப் பிரேரணை, நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் (புதன்கிழமை) கட்சியின் உள்ளூராட்சி சபை உருப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
”தாமைர மொட்டு உள்ளிட்ட அணியினருக்கு நாடாளுமன்றில் 100 உறுப்பினர்களின் ஆதரவினைக் காட்டமுடியுமா? என கேட்கிறேன்.
அப்படி இல்லையேல் உங்களுக்கு இருக்கும் உரிமை என்ன?, அதிகாரம் என்ன?, உங்களுக்கு அமைச்சரவைக்குள் நுழைய முடியாது. பலவந்தமாக அரசாங்கத்தை அமைக்க முடியாது. அந்த காலம் முடிந்து விட்டது.
2015 ஆகஸ்ட், செப்டம்பரில் இருந்து நாடாளுமன்றில் எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
எந்தநேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதனைத் தோற்கடிக்கவும், நம்பிக்கையை காண்பிக்கும் யோசனையை கொண்டு வந்தால், அதனை வெற்றிக்கொள்ளவும் தேவையான பெரும்பான்மை எம்மிடமே இருக்கிறது.” என கூறினார்.