மஹிந்தவின் இடைக்கால கணக்கு அறிக்கையை அனுமதிக்க முடியாது!
நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அனுமதிக்க முடியாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
a“ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தில் நாளை மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்.
இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். முதலில் அமைச்சரவை ஒன்று இருக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத அரசாங்கமொன்று எவ்வாறு அமைச்சரவையைக் கூட முடியும்?
நாடாளுமன்றத்திற்கு வராத போலி அரசாங்கத்தினால் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியுமா? நாடாளுமன்ற பெரும்பான்மை நாளை 122 முதல் 129 ஆக அதிகரிக்கும். இடைக்கால கணக்கறிக்கையை தோற்கடிப்போம்.
முதலில் புதிய அரசாங்கம் என கூறிக்கொள்பவர்கள் நாடாளுமன்றில் 85 முதல் 90 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை காட்டுங்கள்” என அவர் சவால் விடுத்தார்.
2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்படும் வரை, எதிர்வரும் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக இந்த நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைப் படி மொத்த செலவினமாக 1735 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.