உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்!

உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்!

உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர்.

இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர்.

இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நிலையில், அனைத்து போட்டிகளுமே சமனானது. பிறகு இருவரும் ரேபிட் டைபிரேக் போட்டியில் விளையாடினார்கள்.

ரேபிட் டைபிரேக் போட்டியின்படி, அதிவிரைவு நேரக் கட்டுப்பாடு கொண்ட 4 போட்டிகளில் இருவரும் விளையாடுவார்கள்.

இந்த போட்டியில் 25 நிமிடங்களும், ஒரு வீரருக்கு காய் நகர்த்துதலுக்காக கூடுதலாக 10 வினாடிகளும் வழங்கப்படும். இதன்மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

இந்நிலையில், டை பிரேக் போட்டியில் 3-0 என வென்று மீண்டும் உலக சம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சென், வென்றார்.

27 வயதான கார்ல்சன். 2013ஆம் ஆண்டு இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்தது முதல்முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றார்.

மீண்டும் 2014ஆம் ஆண்டு ஆனந்தைத் தோற்கடித்து உலக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
அதன் பிறகு 2016ஆம் ஆண்டு செர்ஜி கர்ஜாகின்னை வென்றவர், தற்போது கருணாவையும் வென்று நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Copyright © 9235 Mukadu · All rights reserved · designed by Speed IT net