ஐ.தே.க.வை ஆதரிக்கும் கூட்டமைப்பின் முடிவு ஏமாற்றும் செயல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சியினது அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக (வெள்ளிக்கிழமை) தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் கையெப்பமிட்ட அந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
தேசிய அரசாங்கம் இல்லாமலாக்கப்பட்டதன் பின்னர் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஒரு அரசியலமைப்பின் அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் நிலையை உருவாக்குவதற்கும் இம்முடிவினை எடுத்துள்ளதாக சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
கூட்டமைப்பின் தலைமைத்துவம் இச்செயற்பாட்டின் மூலம் வெறுமனே மக்களை மாத்திரம் ஏமாற்றவில்லை. தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.