யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் வாள்களுடன் கைது!
யாழில் பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனைவிட அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் மூவரும் கொக்குவிலைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் இன்று (சனிக்கிழமை) மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு ஆவா குழுவின் தலைவர் எனப் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் மோகன் அசோக் கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.