தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் காபில வைத்திரத்ன சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில், மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இன்டர்போலினால் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதனை இலங்கை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனவும், கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறை மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி வரையில் குமரன் பத்மநாதன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குளோபல் தமிழ்