பேருந்து நிலையம் மீள் திறப்பு சாதகமான தீர்வு கிடைக்கும் வர்த்தகர் சங்கம் நம்பிக்கை!
வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீள் திறப்பது குறித்து இன்று (03.12) பிற்பகல் 2.30மணியளவில் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வர்த்தக சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பினையடுத்து இம் மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுமூகமான ஒரு தீர்வு கிடைக்கும் என்று வர்த்தகர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வர்த்தகர் சங்க செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மேலும் தெரிவிக்கும்போது,
இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் புனர் வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகிய முற்தரப்பினருடன் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்தும் சகல பேருந்து சேவைகளையும் வந்து செல்வதற்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் சங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், வர்த்தகர்கள், கமக்கார அமைப்புக்கள், பாடசாலை சமூகத்தினரின் மகஜர்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை யாழப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதையடுத்து ஆளுநர் நேரடியாக மீள் திறக்கப்படவேண்டிய பேருந்து நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இன்றைய சந்திப்பில் எங்களிடம் உறுதியளித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் பழைய பேருந்து நிலையம் மீள் திறப்பதற்குரிய நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.