வவுனியாவில் நடைபாதை வியாபார நிலையத்தை அகற்ற கோரிக்கை!
வவுனியா, பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நகரசபை தலைவர் எவ்வித அக்கறையுமின்றி செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையின் செயற்பாடுகள் காரணமாக அது தடுத்து நிறுத்தப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சில வியாபார நிலையங்களில் சீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் சம்பவ இடத்திற்குச் சென்ற உப நகர பிதா சு.குமாரசாமி, தற்காலிகமாக சீரமைப்புப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும், நகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் சீரமைக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபாதையிலுள்ள வியாபார நிலையங்கள் அனைத்திற்கும் கூரைத்தகடுகள் அமைக்கப்பட்டு உயரமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயத்தில் நகரசபையினர் எவ்விதமான நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் நடைபாதை வியாபார நிலையங்களுக்கு சார்பான நிலைப்பாட்டிலிருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து நகர உப பிதாவிடம் வினவிய போது,
அண்மையில் அங்கு சென்று சீரமைப்புப் பணிகளை நிறுத்துமாறு தெரிவித்திருந்தோம்.
இன்று நகரசபை தலைவர் அலுவலகத்திற்குச் சமூகமளிக்கில்லை இது குறித்து அவருடன் கலந்துரையாடிவிட்டு நாளைய தினத்தில் பதில் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நகரசபைத் தலைவர் பள்ளிவாசல் நடைபாதை வியாபார நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியுள்ளார்.
அவர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ளமையினால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்று கடந்த மாதம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடச் சென்ற இளைஞர்களிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.