வவுனியாவில் அதிகாலை வீடு புகுந்து திருட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது.
வவுனியாவில் நேற்று அதிகாலை வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த தங்க நகைகள் ஒரு தொகைப்பணம் என்பனவற்றை திருடிய சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் பொலிசார் தெரிவிக்கும்போது,
நேற்று அதிகாலை வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 12பவுண் தங்க நகைகளையும் ஒரு இலட்சம் ரூபாவினையும் திருடிச் சென்றுள்ளார்கள்.
இதையடுத்து நேற்று காலை வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மேலும் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை பொலிசார் வலைவீசித் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.