தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் – தோட்ட தொழிற்சாலைகள் ஸ்தம்பிதம்
தோட்ட தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தோட்ட தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தோட்டத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் பல பகுதிகளில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னாள் கூடிய தொழிலாளர்கள் தங்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன், டயர்களை கொளுத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வீதி வீதியாக இறங்கி போராடவேண்டியுள்ளதாகவும், இதனை பேசித்தீர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் தங்களிடம் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தங்களை போராடுவதற்கு வீதியில் இறக்குவதாகவும் அவ்வாறு போராட வேண்டுமென்றால் எதற்காக இவர்களுக்கு சந்தா பணம் செலுத்த வேண்டும் என்றும் மலையகத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் இதுவரை தங்களுக்கு உரிய நடவடிக்கை பெற்று கொடுக்காது தங்களது பதவிகளை மாத்திரம் காப்பாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதாவும் குற்றம் சுமத்தினர்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை
சம்பள உயர்வினை கோரி கடந்த பல மாதகாலமாகவும் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.