உறங்கிக்கொண்டிருந்த யானைகளையும் எழுப்பிய மைத்திரி!
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த கருத்து முரண்பாடுகளை நீக்கி, கட்சியை வலுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தொகுதி அதிகார சபைக் கூட்டம் பூண்டுலோயா நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, கட்சிக்குள் இருந்த கருத்து முரண்பாடுகளை போக்கி கட்சிக்கு ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் கூற வேண்டும். கடந்த மாதம் 26ஆம் திகதி நடந்தவைகள் கட்சியினருக்கு பெரும் மனக் கவலையை ஏற்படுத்தியது.
உங்களுக்கு அந்த வேதனை ஏற்பட்டிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியினரே கொத்மலை தொகுதியில் அனைத்து இடங்களுக்கு சென்று மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு வாக்கு சேகரித்தனர்.
ஜனாதிபதியாக பதவியில் அமர்ந்த பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு அவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சேவை செய்யவில்லை.
மைத்திரிபால சிறிசேன உறங்கிக்கொண்டிருந்த யானைகளை எழுப்பியுள்ளார். யானைகள் வலுவாகி வந்துள்ளன. இன்னும் 10 நாட்களுக்குள் கட்டாயம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க முடியாது என்று ஜனாதிபதி கூற முடியாது. நாங்களே எமது தலைவர் யார் என்பதை தீர்மானிப்போம். எமது பிரதமர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியினரே தீர்மானிப்பர் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அவரது நடவடிக்கைகளில் பிரச்சினை இருக்கலாம். அது வேறு பிரச்சினை. அது இந்த போராட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படலாம் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.